பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

காப்புக்கயிறு கட்டுவதன் பலன்


10 ஆகஸ்ட், 2012  

கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டியதன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும். மஞ்சள், சிவப்பு, கருப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக செயல்படும். பட்டுநூலினால் ஆன காப்புக்கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிய வேண்டும்

 பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றினாலான ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது, மந்திரங்கள் சொல்வது அதிக பலன் தரும். இது போலவே காப்புக்கயிறும் மந்திரங்களை ஈர்க்கும். தூதுவளை செடியை நீங்கள் அறிவீர்கள்.  

சாதாரணமாக சளித்தொல்லைகளுக்கு தூதுவளை செடியை பயன்படுத்துகிறோம். ஆனால் அதே தூதுவளை செடிக்கு காப்பு கட்டி அதாவது பட்டுநூல் அல்லது கற்றாளை நூலில் மஞ்சள் கிழங்கை கட்டி அந்தக் கயிற்றால் செடியில் சுற்றிக்கட்டி 40 நாட்கள் சோடச கணபதி மூலமந்திரத்தை 108 முறை உச்சரித்து செடிக்கு தேங்காய் உடைத்து , தூப, தீபம் காட்டி அதன் பின் செடியை வேருடன் பிடுங்கி உலர்த்தி பொடி செய்து பல்வேறு அனுபானங்களில் பயன்படுத்த 40 வகையான நோய்களைக் குணமாக்கும். அதாவது அந்தக் காப்புக்கயிற்றின் மூலம் செடி மந்திரங்களை சேமிப்பதனால் 40 வகையான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது

 இது போலவே நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலை சேமித்து நம்மைக் காக்கும். மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது. நாயுருவி, சீதெவிசெங்கழுநீர் , அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில்(தாயத்து) அடைத்து அணிவார்கள்.  

காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவதும் ஒரு வகையில் காப்பே. நாகரீகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீறு அணிய தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை நாமும் அணிந்து, குழந்தைகளுக்கும் அணிவித்து காத்துக்கொள்ளுங்கள். அது நீங்கள் ஒரு இந்து என்று உணர்த்துவதாகவும் நம் சமய நம்பிக்கையை வளர்ப்பதாகவும் இருக்கும். சில சமுதாயங்களில் மணமகன் பெண்ணுக்கு எப்போதும் உன்னைக் காப்பேன் என்று ரக்ஷை அணிவிக்கும் சடங்குகள் உண்டு. ரக்ஷையை ஒருவருக்கொருவர் கட்டி சகோதர பந்தத்தை ஏற்படுத்தும் ரக்ஷாபந்தன் விழா ஆகஸ்டு மாத பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இதையும் கொண்டாடி ஜாதி வேற்றுமையைக் களைந்து சகோதர உறவை பலப்படுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக