பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 மே, 2017

தமிழின் பெருமை

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்.

புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன்.

இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.

ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது. சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது.

ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம்.

ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். (வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்.

கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.) தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

-######

ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்                       
[9:59 PM, 4/26/2017] +91 90030 12559: மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.

மழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.

அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன். 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல! தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.

சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.

இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.

வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.

என்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்... 'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.

நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 'அதுதான் அந்த நரி’ என்றார்.

அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).

நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.

அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.

சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.

கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.

அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.

தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?

அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...

நன்றி-  எழுத்தாளர் சு.வெங்கடேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக