பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை.
ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை. அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும்; அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன.
வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும். இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில்
கோயில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும். அந்த வகையில் நாம் வணங்க வேண்டிய பஞ்சபூத ஆலயங்கள்
1.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம் 2.திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயம் 3.திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம்
4.சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயம் 5.ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்
1.ஏகாம்பரநாதர் ஆலயம் காஞ்சிபுரம் (நிலம்)
600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள்
நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
2.ஜம்புகேசுவரர் ஆலயம் திருவானைக்காவல் (நீர்)
திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும்.
இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது.
18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.
3.அண்ணாமலையார் ஆலயம் திருவண்ணாமலை (நெருப்பு)
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது.
இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார்.
4.தில்லை நடராஜர் ஆலயம் சிதம்பரம் (ஆகாயம்)
மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது.
அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும்
கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது. அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.
5.ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் ஸ்ரீ காளஹஸ்தி (காற்று)
ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் முக்கியமான சைவத்திருத்தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்குகிறது. திருப்பதியிலிருந்து 36 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும்
இந்த கோயில் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாகிய ‘வாயு'விற்காக (காற்று) எழுப்பப்பட்டுள்ள லிங்கத்தை கொண்டுள்ளது. இங்கு சிவபெருமானை வழிபடுவதற்காக மட்டுமல்லாமல், ராகு மற்றும் கேது தொடர்புடைய ஜாதக தோஷ நிவர்த்திக்காகவும்
பக்தர்கள் விசேஷ பூஜைகள் செய்ய வருகை தருகின்றனர். அதோடு திருப்பதிக்கு யாத்திரை மேற்கொள்ளும் பெரும்பாலான பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்திக்கும் வந்து காளஹஸ்தீஸ்வரரை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கு சென்று நாம் வழிபடலாம். இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.
பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.
இதற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.
வாழ்க நமசிவாயம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக